அமெரிக்க அணு உலைகளை வாங்காதே

அமெரிக்க அணு உலைகளை வாங்காதே!
அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஆறு அணு உலைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு இப்படி ஓர் ஒப்பந்தம் போடுவதும், கொள்கை முடிவு எடுப்பதும் சட்ட விரோதமான செயல்கள் ஆகும்.
2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, ஏராளமான மக்கள் பணத்தையும், நேரத்தையும், சக்தியையும் விணாக்கி எதையும் சாதிக்கவில்லை. இப்போது திடீரென அவசர கதியில் இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள். எந்த அமெரிக்க நிறுவனம் இந்த அணு உலைகளை உருவாக்கப் போகிறது, இந்தியாவின் எந்தப் பகுதியில் இந்த உலைகள் நிறுவப்படப் போகின்றன, இந்திய இழப்பீடுச் சட்டத்தை மதிப்பார்களா என ஏராளமானக் கேள்விகளுக்கு பதிலே இல்லை.
அணுப்பரவலாக்கத் தடைச் சட்டத்தை கடுகளவும் மதிக்காமல் தனது சுயநல லாப நீக்கங்களுக்காக இந்தியாவுக்கு அணு உலைகளை அமெரிக்கா விற்கிறது. அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கும் அமெரிக்கா உதவுகிறது. ஆனால் இதே அமெரிக்கா ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் அணு உலைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்தியா அணுவாயுதப் பரவலாக்கத் தடை சட்டத்தில் கையெழுத்துப் போடாத நிலையிலும் தன்னுடைய கொள்ளை லாபத்துக்காக அமெரிக்கா அணு உலைகளை விற்கிறது. இந்த பத்தாம்பசலித்தனத்தில் இந்தியாவும் பங்கெடுப்பது தவறானது.
அதிகமான அளவில் அடர்த்தியாக மக்கள் வாழும் இந்தியாவுக்கு அணு உலைகள் ஏற்புடையவை அல்ல. தைவான், ஸ்வீடன் போன்ற நாடுகள் அண்மையில் அணு உலைகளை மூடியிருக்கும் நிலையில், தன் மக்கள் நலம் குறித்து சிந்திக்காமல், தனது வல்லாதிக்க தோழமை நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த இந்திய அரசு முயற்சிக்கிறது. இந்த அடிமைத்தன, மக்கள் விரோத அணுகுமுறையைக் கைவிட்டு, அமெரிக்க அணு உலை வியாபார ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

 

-அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
-அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here