அமெரிக்காவும் கொரோனாவும் – யானை படுத்தால் குதிரை மட்டம் – சியாம்

அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் தினமும் கேட்டு வருகிறோம். அங்கு இதுவரை 12 லட்சம் பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினம்தோறும் 2,000 நபர்கள் வரை மரணம் அடைகின்றனர். அமெரிக்கா திணறுவதை சுட்டிக்காட்டி அதனுடைய நம்பர் ஒன் வல்லரசு இடத்திலிருந்து விலகுவதாக ஊடகங்களிலும்
செய்திகள் வெளியிடப்படுகின்றன.

மேலும் அதிபர் டிரம்ப் இந்த இடர்ப்பாடான நேரத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுதான் இந்த நோய்த் தொற்று அதிகம் ஆனதற்கு காரணம் என்ற செய்திகள் வருகின்றன. இந்தச் செய்திகளில் உண்மை இருந்தாலும் பொருளாதார ரீதியாக அங்கு இருக்கும் மக்களுக்கு அமெரிக்க அரசு என்ன செய்தது என்ற கோணத்தில் நாம் பார்த்தால் பல ஆச்சரியங்கள் இருப்பது தெரிய வருகிறது.

இந்த நோய்த் தொற்று காரணமாக நமது நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் பல வணிக/ தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் அதிக அளவில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அங்குள்ள தரவுகளின் படி ஏறக்குறைய நான்கு கோடி பேர் தங்களுடைய வேலையை இழந்து உள்ளனர்.

இந்தப் பொருளாதார தாக்கத்திலிருந்து அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கு அதிபர் டிரம்பும் அமெரிக்க நாடாளுமன்றமும் போர்க்கால அடிப்படையில் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரண நிதியாக ஒதுக்கினர் (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. இந்திய ரூபாய் மதிப்பில் $2.2 டிரில்லியன் என்பது சுமார் ரூ 150 லட்சம் கோடி ஆகும். இது அமெரிக்க ஜி.டி.பியில் சுமார் 10%. இந்தியாவின் ஆண்டு ஜி.டி.பியில் 3ல் 2 பங்கு).

இந்த நோய்த் தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக ஒவ்வொரு நபருக்கும் $1200 நிவாரணமாக வழங்கியது அமெரிக்க அரசு. இதில் எந்த பாரபட்சமும் பார்க்காமல் அனைத்து அமெரிக்க மக்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்பட்டது.

மேலும் சிறுவர் சிறுமியருக்கு தலா $500 நிவாரணமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் தாய், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட சராசரி குடும்பத்திற்கு $3400 அமெரிக்க டாலர்கள் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் இரண்டரை லட்சம் ரூபாய் ஆகும்.

இதுபோல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவருக்கும் உதவி செய்வது ஹெலிகாப்டர் மணி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பணத்தை வழங்குவதன் மூலம் அமெரிக்கர்கள் பொருளாதார இழப்பிலிருந்து ஓரளவிற்கு காப்பாற்றப்பட்டனர்.

இது மட்டுமல்ல. நமது நாட்டில் வருங்கால வைப்புநிதி போல அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பணியாளரையும் பணி நீக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு காப்பீடு எடுக்க வேண்டும். இந்தக் காப்பீட்டின் படி ஒருவர் வேலை இழந்தால் காப்பீட்டு நிறுவனம் ஒருவருக்கு பணி இல்லாத ஒவ்வொரு மாதத்திற்கும் அவர் மீண்டும் பணிக்குச் செல்லும் வரை குறிப்பிட்ட தொகையை வழங்கும். இந்தத் தொகை சராசரியாக வாரத்திற்கு $300 முதல் $400 ஆக இருக்கும். இதன் மூலம் வேலை இழந்த ஒவ்வொருவருக்கும் $1500 வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். இது பழைய நடைமுறை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அதிகமாக பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதால் இந்த சூழ்நிலையை சமாளிக்க அமெரிக்க அரசு கூடுதலாக $600 ஒவ்வொரு வாரமும் வழங்கி வருகிறது. அதனால் பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் மாதம் $4300 அமெரிக்க டாலர்கள் வரை பெற முடியும்.

இந்த நிவாரணங்கள் ஒவ்வொருவருக்கும் 12 வாரங்கள் ஜூலை 31 வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் $4300 (இந்திய மதிப்பில் சுமார் ரூ 3 லட்சம் ஆகும்). இது பெருவாரியான அமெரிக்க மக்களின் மாத ஊதியத்தை விட அதிகமாகும்.

இதன் மூலம் வேலை இழந்த அமெரிக்க மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படாத காரணத்தினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை பெருமளவில் விரைவில் சரி செய்ய முடியும்.

நமது இந்திய நாட்டில் இருந்து பெருவாரியான மக்கள் அமெரிக்க நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் கிரீன் கார்ட் பெற்றவர்கள் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள். மேலே சொன்ன சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் கிடைக்கும். மேலும் பெருவாரியான இந்திய தம்பதியர்கள் அமெரிக்க நாட்டில் தங்களது குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர். இந்தக் குழந்தைகள் அமெரிக்க பிரஜைகள் அவர். அதனால் இந்த சலுகைகள் கிரீன் கார்டு இல்லாமல் இருந்தாலும் இந்தப் பெற்றோர்களுக்கும் ஓரளவிற்கு கிடைக்கும்.

ஆனால் இன்னும் பெருவாரியான இந்தியர்கள் H1B விசாவில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எந்த சலுகையும் அரசாங்கத்திடமிருந்து கிடைப்பதில்லை. இவர்கள் தான் தமது வேலையை இழந்து சொந்த நாட்டிற்கும் திரும்ப முடியாமல் அமெரிக்க நகரங்களில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு இந்திய அரசு உதவுவது மிகவும் முக்கியமானதாகும்.

மேலும், அமெரிக்காவில் தனிநபர்களுக்கு மட்டுமல்லாது நிறுவனங்களுக்கும் பலவிதமான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. ஒரு நிறுவனம் தனது எந்த பணியாளரையும் பணிநீக்கம் செய்யாமலிருந்தால் பல சலுகைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் விமான போக்குவரத்து போன்ற நிறுவனங்கள் இயங்காததால் நஷ்டத்தை ஈடுசெய்ய பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அந்த நாடு இந்த நோய்த் தொற்றில் இருந்து விடுபடும் போது பொருளாதார நெருக்கடியில் இருந்து எளிதாக மீள முடியும்.

நமது கிராமப்புறத்தில் யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற ஒரு பழமொழி உள்ளது. அமெரிக்க நாடு தனது மக்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை பார்க்கும் பொழுது இந்த பழமொழிக்கு நமக்கு நன்கு அர்த்தம் புரிகிறது.

நம் நாட்டில், வெளிமாநிலங்களில் இந்த ஊரடங்கினால் கடந்த 40 நாட்களாக மாட்டிக்கொண்ட தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஆகும் ரயில் கட்டணத்தை அந்தத் தொழிலாளர்களிடம் இருந்து பெற்று மாநில அரசுகள் ரயில்வேயிடம் வழங்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நாட்டில் வாழும் நாம் அமெரிக்க அரசு இந்த நேரத்தில் தனது மக்களுக்கு வழங்கும் சலுகைகளை கேட்கும்பொழுது அமெரிக்கர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.