டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவதற்கு முன் அமெரிக்கர்களுக்கு உணவளிக்கட்டும்.

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் போதுமான உணவின் தேவையை சந்திக்க இயலவில்லை என்பது பல அமெரிக்கர்களின் கருத்து. மேலும் சில அமெரிக்க அரசாங்க நலன்கள் காலாவதியாகி இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று சில நாட்களுக்கு முன்பு வெளியான வால் தெரு செய்திஇதழ் (the Wall Street Journal) அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார வல்லுநர்கள் பிரச்சனை “பெரும் மந்தநிலையின் (the Great Recession) உச்சத்தில் இருந்ததை விட மோசமானதாக” இருப்பதாக நம்புகிறார்கள்.

அமெரிக்காவின் தற்போதைய உள்நாட்டு நிலைமையை நோக்கும் போது அது உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு வல்லரசாக தற்போது தெரியவில்லை. மேலும் அமெரிக்கா இது நாள் மட்டும் தன்னை மனித உரிமை காவலன் என்றும் மனித மேம்பாட்டுக்குப் பாடுபடும் நாடு என்றும் கூறி வந்ததற்கு அதன் கன்னத்தில் அறைந்தது போன்று தற்போது அங்கு சூழல் நிலவி வருகின்றது.

கோவிட்-19 தொற்று நோய்க்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற விடையிறுப்பு அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. இதற்கு சில அமெரிக்க அரசியல் உயரடுக்கினர் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தொற்று நோய் பரவி வரும் இச்சூழலில், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெருகிவரும் இடைவெளி மற்றும் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நிலையில், சில அமெரிக்க அரசியல்வாதிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அலட்சியமாகவும் பொறுப்பற்றவர்களாகவும் உள்ளனர். ஒருமுறை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், அறிகுறியற்ற பிரபலங்கள் மற்றவர்களுக்கு முன்பு கோவிட்-19 சோதனைகளைப் பெற வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பும் போது, “நான் அப்படி சொல்ல மாட்டேன், ஆனால் ஒருவேளை அது தான் உண்மையாக இருக்கலாம்” என்ற ஒரு பொறுப்பற்ற பதிலளித்தார். சமூக டார்வினிய கோட்பாட்டை அவர் வெளிப்படையாக ஆதரிக்கிறார் என்பது அம்பலமாயிருக்கிறது.

மார்ச் மாதம் சீனாவின் அரசு கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்ட அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களின் பதிவுகளின்படி, இலட்சக்கணக்கான மக்கள் பசியோடு இருக்கும் ஒரே வளர்ந்த நாடு அமெரிக்கா மட்டுமே, மேலும் அங்கே அடித்தட்டில் வாழும் மக்கள் மிகுந்த துன்பத்தில் வாழ்கின்றனர்.

கோவிட்-19 மீண்டும் ஏழை அமெரிக்கர்களின் கடுமையான விளிம்புநிலைகளை அதிகரித்துள்ளது என்பது உண்மை. பலர் இப்போது அமெரிக்காவை ஒரு சொகுசு இந்தியாவாக பார்க்கின்றனர் – ஒன்று பணக்காரர்களுக்கு, மற்றொன்று ஏழைகளுக்கு, மேலும் உயரடுக்கு மக்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கும், கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கும் உள்ள இடைவெளி இரு துருவங்கள் அளவிற்கு விரிந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியடையாத நாடுகளில் பசி என்பது ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஆனால், நமக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்திருப்பது, அமெரிக்க வல்லரசும் இதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதுதான். இதைவிட மோசமான விடயம் என்வென்றால், குடியரசுக் கட்சி மற்றும் சனநாயகக் கட்சியின் உயரடுக்குகள் அடிமட்ட வர்க்கத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவதாக இல்லை. காப்பீடு வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கோவிட்-19 சிகிச்சையின் செலவை தாங்க முடியாமல் ஒரு பக்கம் தவிக்கும் போது சில அமெரிக்க அரசியல்வாதிகளின் பார்வை இந்த பக்கம் திரும்ப மறுக்கின்றது.

மக்களின் அடிப்படை உரிமைகளாக இருக்க வேண்டிய சுகாதாரமும் உணவும் கோவிட்-19 தொற்று நோய் வெடித்த பின்னர் அமெரிக்க வாழ் ஏழைகளுக்கு ஒரு ஆடம்பரமாக மாறியுள்ளன. தொற்றுக்கு பின்னர் எற்பட்ட பொருளாதார சரிவு அனைத்து உலக அரசாங்கங்களுக்கும் ஒரு நீண்ட கால சவாலாக உள்ளது, ஆனால் அமெரிக்க ஆட்சி அதை மேற்கொள்ள தவறிவிட்டது வெளிப்படையாக தெரிகிறது.
இந்த அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, சில அமெரிக்க அரசியல் உயரடுக்குகள் தற்போது சீனாவை குறிவைத்து வருகின்றன. அங்கு கோவிட்-19 போராட்டத்தின் போது தனிநபர் சுதந்திரத்தை மீறினார்கள் என்று சீனாவின் மீது அவர்கள் குற்றச்சாட்டும் வைத்தனர். இது அபத்தமானது. கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக, சீனா சுமார் 85 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது, மேலும் சீனாவின் தனிநபர் வருமானம் 25 மடங்கு அதிகரித்துள்ளது, இது உலக வறுமைக் குறைப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்புவகிக்கிறது. இந்த செயல் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஒரு பெரிய ஊக்கம் அளிப்பதாக உள்ளது, மேலும் இது உலகளவில் மிகப்பெரிய மனித உரிமைகளுக்கான ஒரு வெற்றியாக இருக்க வேண்டும்.
நம்மால் இங்கு வித்தியாசத்தை தெளிவாக காணமுடிகிறது. சீனா ஒரு பெரிய அளவிலான வறுமை ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து, தொற்றுநோயை விரைவாகக் கட்டுப்படுத்தியது, ஆனால் அமெரிக்காவோ பல இலட்சக் கணக்கானவர்களை பசியுடன் வாட விட்டுவிட்டு, தொற்றுநோயையும் பரவவிட்டது. அமெரிக்காவில் மனித உரிமைகள் என்று அழைக்கப்படுவது சரிந்து விட்டதும் அல்லாமல், அவற்றின் தார்மீக உயர் அடித்தளத்தையும் அது இழந்துவிட்டது.
டிரம்ப் நிர்வாகம் “அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவோம்” என்று கூக்குரலிட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கர்களை மீண்டும் சுகமடைய வைப்பதும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதும், அவர்களின் பசியை போக்குவதுமே தற்போதைய நடைமுறை இலக்குகளாகத் தெரிகிறது.