இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி- அமித்ஷா- ஹரிஷ் பாலா.

0
14


பாராளுமன்றத்தில் ஜூன் 1 அன்று தமிழக உறுப்பினர்கள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ள மறைமுக ஹிந்தி திணிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மும்மொழிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கப் படவில்லை. ஹிந்தியை திணிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

ஆனால் இன்று, ஹிந்தி தின கொண்டாட்டத்தில் இருக்கும் அமித் ஷா, ட்விட்டர் தளத்தில் “இந்தியாவின் அடையாளமாக ஒற்றை மொழி இருக்க வேண்டும். அப்படி ஒற்றை மொழி இருக்கவேண்டும் என்றால் மக்கள் அதிகம் பேசும் ஹிந்தி மொழியே அதற்கு தகுதியானது” என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவில், “இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் தாய் மொழியை நேசியுங்கள். அதே போல ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ளுங்கள். அது தான் பாப்பு (காந்தி) மற்றும் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் கண்ட கனவுகளை நனவாக்கும்” என தெரிவித்து உள்ளார்.

எனக்கு சில கேள்விகள் உள்ளன. காந்தி, பட்டேல் ஆகியோர் கண்ட கனவுகளுக்கும் ஹிந்தி மொழியை கற்றுகொள்ளுவதற்கும் என்ன தொடர்பு? ஹிந்தி கற்றுக்கொண்டால் மட்டுமே நனவாக்க முடியும் என்ற அளவுக்கு என்ன கனவுகளை அந்த இருபெரும் மனிதர்கள் கண்டனர்? இல்லை ஹிந்தி பேசாதவர்கள் காந்தி, பட்டேல் ஆகியோர் கண்ட கனவுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை கட்டமைக்க நினைக்கிறதா இந்த அரசு ? இந்தக் கருத்தைக் கூறியவர் பாஜக தலைவர் அமித் ஷா என்றால் கூட இவ்வளவு ஐயங்கள் எழுந்திருக்காது. கூறியவர் இந்திய ஒன்றிய உள்துறையின் மாண்புமிகு அமைச்சர் அமித் ஷா. அதனால் தான் மீண்டும் இந்த அரசு ஹிந்தி பேசாத மக்களின் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஹிந்தி மொழியை திணிக்க எத்தனிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் “அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு , விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அனைத்துக் கொள்” என்றும் கூறிய தமிழர்கள் ஹிந்தியை எதிர்க்க என்ன காரணம்?

ஹிந்துஸ்தானி மொழி பெற்ற இரண்டு பிள்ளைகள் தான் ஹிந்தி மொழியும் உருது மொழியும். ஹிந்துஸ்தானி மொழியை தேவநாகிரி வடிவத்தில் பயன்படுத்திய போது அது ஹிந்தி ஆனது. அந்த மொழியை பெர்சிய-அரேபிய எழுத்து வடிவத்தில் பயன் படுத்திய போது அது உருது ஆனது ஹிந்தி மொழி ஹிந்து மக்களின் அடையாளமாகவும், உருது இஸ்லாமியர்களின் அடையாளமாகவும் கட்டமைக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்கள் உருது மொழியைக் கட்டாயம் ஆக்கிய போது ஹிந்தி பேசும் மக்கள் அதனை எதிர்த்தனர்.

கிட்டத்தட்ட ஒரே மொழி போல உள்ள உருதை, ஹிந்தி பேசும் மக்கள் ஏற்காத போது, மொழி, பண்பாடு என பலவற்றில் வேறு பட்டு நிற்கும் தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளை பேசும் மக்கள் ஹிந்தியை ஏற்க வேண்டும் என சொல்வது எவ்வளவு கொடுமையானது?

ஹிந்தி-உருது அரசியலில் அவதி,போஜ்புரி, ப்ராஜ் ஆகிய மொழிகளை ‘நீங்களும் எங்கள் பங்காளிகள் தான்’ என ஹிந்தி மக்கள் அம்மொழி பேசும் மக்கள் மீது ஹிந்தியை திணிக்க இன்று அம்மொழிகள் இருக்கும் இடமே தெரியவில்லை. அவ்வாற்றின் தனித்தன்மைகள் அழிந்து போயின. அவதி, ப்ராஜ் போன்ற மொழிகளில் உள்ள நாட்டுப்புற இலக்கியங்கள் மறைந்து போயின. அம்மொழி பேசும் மக்கள் தங்களுக்கு என் கொண்டிருந்த தனித்துவமான சடங்குகளும் மறைந்து அங்கு பெரும்பான்மை ஹிந்துக்கள் செய்யும் சடங்குகள் நிலைத்துவிட்டன.

இதே நிலை தான் இந்தியா முழுதும் ஹிந்தி மொழியை திணிக்கும் போது நடக்கும். ஒரு இனத்தின் பண்பாட்டை,அரசியலை, பெருமையை, பழமையை குலைக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும் என்ற அரசியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள். அதனால் தான் ஹிந்தி மொழி நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்போதும் திணிக்கப் படக் கூடாது என்று தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை பேசும் மக்கள் போராடி வருகின்றனர்.

நாட்டின் அடையாளமாக மொழி வேண்டும் என்று சொல்லும் அமித் ஷா ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். பன்மையில் ஒருமை என்பது இந்தியாவின் அடையாளமாக உலக அரங்கில் பதிவு பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும் எப்படி இந்த நாட்டு மக்கள் ஒற்றுமையாக உள்ளனர் என்று இந்திய தேசத்தை வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். இது தான் இந்தியாவின் அடையாளம். ஹிந்தி அல்ல.

ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஹிந்தியை விட இந்தியா முக்கியம் என நினைப்பவர்கள். இதே எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் இனியும் ஹிந்தி திணிப்பை செய்யாமல் சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்துவது, வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

ஹரிஷ் பாலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here