அனைத்து எண்ணெய் – மீத்தேன், ஹைட்ரோகார்பன் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஷேல் மீத்தேன் எடுப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி அறிவிப்பு.

காவிரிப்படுகையில் ஷேல் மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுத்திக்கொள்வதாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. திட்டமிட்ட காலம் முடிவதற்கு முன்பே, இத்திட்டம் சாத்தியமில்லை என்று கருதி ஓஎன்ஜிசி நிறுத்தியுள்ளது.

2013-இல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு  காம்பே, அஸ்ஸாம், கிருஷ்ணா – கோதாவரிப் படுகை, காவிரிப்படுகை ஆகிய பகுதிகளில் மூன்று கட்டங்களாக, ஷேல் ஆய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிமம் வழங்கியிருந்தது. இதில் முதல் கட்டமாக ஓ.என்.ஜி.சி ஐம்பது பிளாக்குகளிலும், ஆயில் இந்தியா லிமிடெட் ஐந்து பிளாக்குகளிலும் ஷேல் எண்ணெய் -எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப் பட்டிருந்தது.

முதற்கட்டத்தில் காவிரிப்படுகையில் 9 பிளாக்குகளில் ஷேல்  எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி பெற்றது.  ஆனால் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக, ஓ.என்.ஜி.சி யால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

  கிருஷ்ணா -கோதாவரி, அஸ்ஸாம், காம்பே ஆகிய பகுதிகளில் 26 ஷேல் எரிவாயுக் கிணறுகளை அமைத்தது ஓ.என்.ஜி.சி.

காவிரிப் படுகையில் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பும், நிலவியல் காரணமும், மக்கள் எதிர்ப்பால் உருவான அரசியல் தலைமைகளின் எதிர்ப்பும் இத்திட்டத்தைக் கைவிடக் காரணம் எனலாம்.

நிலவியல் காரணமாகவும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும்  கிணறுகளை அமைக்க முடியவில்லை என்று ஓஎன்ஜிசி காரணம் கூறியுள்ளது.

ஆனால் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து  எரிவாயு இருக்கும் அளவை இந்திய அரசு மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி கூறியிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து அனைத்து வகை ஹைட்ரோகார்பன்கள் இருப்பையும் இந்திய அரசு மறுமதிப்பீடு செய்ய இருக்கிறது. ஆகவே, பன்னாட்டு பெருமுதலாளிகளை  இந்திய அரசு இத்திட்டங்களை நடைமுறைப் படுத்த ஈடுபடுத்த வாய்ப்புள்ளது.  

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து களத்தில் நிற்பதன் மூலம் தங்கள் மண்ணையும், நிலத்தையும், நீரையும் சுற்றுச்சூழலையும் நிச்சயமாகப் பாதுகாக்க முடியும். 

ஷேல் மீத்தேன்,  ஷேல் எண்ணெய் ஆய்வுத் திட்டங்களை, காம்பே, அஸ்ஸாம், கிருஷ்ணா -கோதாவரிப்படுகை ஆகியவற்றில் இடையில் கைவிடப் படுவதாகவும், காவிரிப் படுகையில் திட்டம் தொடங்கப்படவில்லை என்றும்   ஓ.என்.ஜி.சி. கூறுகிறது. இந்தியாவில் பிற படுகைகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஷேல் எரிவாயுத் திட்டத்தை காவிரிப் படுகையில் திட்டமிட்டபடி நடைமுறைப் படுத்த இயலவில்லை. இது காவிரிப்படுகையில் மக்களின் தொடர்ந்த எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி!


2013 – இல் அறிவிக்கபட்ட ஷேல் எண்ணெய்க் கிணறுகள் அமைப்புத் திட்டத்தை
ஓ.என்.ஜி.சி கைவிடுவதாக அறிவித்தாலும், பிற மீத்தேன், ஹைட்ரோகார்பன் எண்ணெய்க் கிணறுகள் அமைப்புத் திட்டங்கள் தொடர்கின்றன.

இத்திட்டங்களின்படி அமைக்கப்பட இருக்கும் கிணறுகள், காவிரிப் படுகையில், 3200 மீட்டர் ஆழத்தில் ஷேல் பாறையில்தான் அமைக்கப்பட இருக்கின்றன.

சீர்காழி -மாதானம் தொடங்கி இராமநாதபுரம்- பெரியபட்டினம் வரை  ஓஎன்ஜிசி அமைக்கின்ற 110 கிணறுகளும் 3200 மீட்டர் ஆழத்திற்குக் கீழ் உள்ள ஷேல் அடுக்கில் தான் அமைக்கப்படுகின்றன. இதில் ஹைட்ராலிக் பிராக்சரிங் அல்லது நீரியல் விரிசல் முறையில் தான் எண்ணெய் எரிவாயு எடுக்க முடியும். இது மிகவும் அபாயகரமானது.

அதுமட்டுமின்றி, 2016இல் இந்திய பெட்ரோலிய துறை அறிவித்த அனைத்து வகை எண்ணெய் – எரிவாயுவையும் ஒரே உரிமத்தின் எடுக்க அனுமதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டப்படி, கிணறுகள் 3500 மீட்டர் ஆழம் முதல் 5000 மீட்டர் ஆழம் வரை அமைக்கப்படுகின்றன. ஓஎன்ஜிசி வேதாந்தா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் 7000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், காவிரிப் படுகையில்பலநூறு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க இருக்கின்றன. இதில் நிலக்கரிப்படுகை மீத்தேன் முதல் ஷேல் எரிவாயு வரை அத்தனையும் அடங்கும்.

2018 ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுபடி, இதுவரை மரபு சார்ந்த எண்ணெய் எரிவாயு கிணறுகளும் இனி ஹைட்ரோகார்பன் கிணறுகளாகவே செயல்படும் என்று முடிவெடுத்துள்ளது.

ஆகவே, ஷேல் எண்ணெய் எரிவாயுத் திட்டம் கைவிடப்பட்டது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், அனைத்து எண்ணெய் – எரிவாயுத் திட்டங்களும்  தமிழகத்தில் கைவிடப்பட வேண்டும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும். அது மட்டுமே தமிழகத்தைப் பாதுகாக்க எஞ்சியிருக்கும் ஒரே வழி ஆகும்.

தமிழ்நாட்டிலிருந்து அனனத்து  எண்ணெய் -எரிவாயு நிறுவனங்களையும்  முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்ய வேண்டும்.

ஆகவே, மக்களாகிய நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.  தொடர்ந்து களத்தில் நிற்போம்!

– பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு.
27.11.2019.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here