அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை! – ராமதாஸ்

அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை! - ராமதாஸ்
அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை! - ராமதாஸ்
தமிழ்நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும் தான் நடைபெற்று வருகிற நிலையில் இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் கூறியிருப்பதாவது,”தமிழ்நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும் தான் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டாமல் ஊழலில் மட்டுமே பினாமி அரசு தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஜனநாயகம் என்பதன் பொருள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பதாகும். ஆனால், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட எந்த அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தோன்றவில்லை. அரசுத்துறை பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஊழல் செய்த நிலை மாறி, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்க்கும் வழக்கம் உருவானது. 2000-ஆவது ஆண்டுகளில் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகியவை வரன்முறை இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டன. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வகையில் மட்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தேசப்பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான 18 குற்றச்சாற்றுகள் அடங்கிய புகார் பட்டியலை கடந்த 17.02.2015 அன்று அப்போதைய ஆளுனர் ரோசய்யா அவர்களிடம் எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு நேரில் வழங்கியது.

அக்குற்றச்சாற்றுகளுக்கான தொடக்கநிலை ஆதாரங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆளுனரிடம் ஒப்படைத்திருந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாற்றுகளை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி, அவரது கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் அக்குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்திருக்க வேண்டும். 1972-ஆம் ஆண்டில் திமுக அரசு மீது எம்.ஜி.ஆரும், இப்போது திமுகவை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலர் கல்யாணசுந்தரமும் அளித்த புகார் மனுக்கள் மீது அன்றைய ஆளுனர் அவ்வாறு தான் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆனால், பா.ம.க. அளித்த ஊழல் புகார்கள் மீது முந்தைய ஆளுனர் ரோசய்யா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆட்சியாளர்களின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், துணிச்சல் பெற்ற ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். 2015-ஆம் ஆண்டு ஆளுனரிடம் புகார் மனு அளித்த பிறகு கடந்த 30 மாதங்களில் ஏராளமான புதிய ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றின் மூலம் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவை குறித்து விசாரணைக்கு ஆணையிடும்படி அரசுக்கு விடுத்த வேண்டுகோள்கள் விழலுக்கு இறைத்த நீராயின.

சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையான பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்க வேண்டிய தமிழ்நாடு, இன்று ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் தள்ளாடிக்கொண்டு இருப்பதற்குக் காரணம் ஊழல் தான். தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் நீடிக்கும் வரை தமிழகத்திற்கு வளர்ச்சி என்பது சாத்தியமல்ல. எனவே, தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்படுவதுடன், ஊழல் குற்றத்தை செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு நாளை (09.12.2017) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேதகு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து முறையிட உள்ளது. அப்போது புதிய ஊழல் குற்றச்சாற்றுகள் அடங்கிய மனுவும் ஆளுனரிடம் வழங்கப்படும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here