அண்ணா பல்கலைக்கழக பாடதிட்டத்தில் சமஸ்கிருத திணிப்பு – அஸ்வினி கலைச்செல்வன்.

பொறியியல் பாடத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை 2019-ஆம் ஆண்டிற்காக மாற்றியமைத்துள்ளது. 

இதில் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தலின் பேரில், இந்திய வரலாறு, அரசியலமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல், மேலாண்மை தத்துவங்கள் ஆகிய பாடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டன.இதன் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்தில் வரும்  தத்துவவியல்(Philosophy) பாடத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT, CEG, ACT, SAP வளாகத்தில் உள்ள பொறியியல் மாணவர்களுக்கு மட்டும் வரும் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படுகிறது.அந்த தத்துவ பாடத்தில் 6 வேதமும், பகவத் கீதையும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி எம்.இ., எம்.டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் இரண்டாம் ஆண்டில் தத்துவப் பாடத்தில் புராணங்கள், உபநிடதங்கள் இடம்பெற்றுள்ளன.

பாசிச பா.ஜ.க அரசு காவி மையமாக்கலை மறைமுகத்தன்மையின்றியே தத்துவங்களைப் பாடத் திட்டங்களில் கொண்டு வருகிறது. இதற்கு மாநில அரசும் தன் முழு ஒப்புதலோடு செயல்படுத்தி வருகிறது. தத்துவங்கள் என்ற பெயரில் இப்போது பகவத் கீதையை நேரடியாகப் பாடத் திட்டத்தில் கொண்டு வருவதை மாநில அரசுகளும் அனுமதிக்கிறது. இதற்க்கான முழு ஒத்துழைப்பை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும் வழங்கியிருப்பது கொடுமையிலும் கொடுமை.

மேலும் பகவத் கீதை, அறிஞர்கள் பிரான்சிஸ் பேகன் மற்றும் மைக்கேல் பூகோவிற்கு சமமாக வைத்திருப்பது மாணவர்கள் மனதில் நஞ்சு விதைப்பதாகவும் இருக்கிறது.பிரான்சிஸ் பேகன், மைக்கேல் பூகோ இவ்விருவரையும் பாதுகாப்பிற்காக கொண்டு வருகிறது மத்திய அரசு.

தொழில் நுட்ப அறிவில், தொழில் நுட்ப அறிவியலில் பகவத் கீதையை கொண்டு வருவதன் நோக்கம் என்ன?
தொழிற்நுட்ப அறிவியலில் பல விஞ்ஞான அறிவு வளர்ச்சிக்கேதுவாக விஞ்ஞானிகளின் தத்துவங்களை பாடமாக வைக்காமல் மத சார்பற்ற கல்விக்கு எதிராக செயல்படுவது வேதனைக்குரியது.அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகமானது, அறிவியலுக்கு எதிராக செயல்படுத்துவதும் காவிப் பல்கலைக்கழகமாக மாற்றத்துடிப்பதும் இந்த அரசின் சூட்சுமமே. இந்த மாணவர்கள் மீது அதிலும் முக்கியமாக தமிழக மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை இந்த மத்திய – மாநில அரசுகள் தொடுத்து வருகின்றன.

பாடத்திட்டத்தில் பகவத் கீதையை தடுத்து நிறுத்தி கல்விமுறையை பாதுகாக்க, இந்தி எதிர்ப்பை தடுக்க, புதிய தேசிய கல்விக் கொள்கை-2019 (வரைவு) என்ற பெயரில் மாணவர்களின் உரிமைகள் பறிப்பை தடுத்து நிறுத்திட, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புகளையும், தபால்துறை, வங்கி மற்றும் ரெயில்வே துறை என்று அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்திடவும் தொடந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைப்பெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் 2019ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் ‘சமஸ் கிருதம்’ திணிக்கப்படும் முயற்சிக்கு பலதரப்பட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்படுவதை பல்கலை கழகத்தில் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும்,  உயர் கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை அறிவித்ததை மாணவர்களும் ,சமூக ஆர்வலர்களும் ஏற்க மறுத்துள்ளனர்.

அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்த்து வரும் நிலையில், மதவாதங்களையும் சேர்ந்தே திணிப்பதை ஏற்க முடியாது. அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பொறியியலில் ஆக்கப்பூர்வமான பாடத்திட்டத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் 
தொழுது படித்திடடி பாப்பா
எனும் பாரதி பாடலை இச்சமூகம் மறந்திராத மாணவர் சமூகம் உள்ளவரை
தமிழோடு வாழ்வோம்.
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழர்க்கு இப்புவி மேலே!
– பாவேந்தர் கூற்றென மத மொழி சார்புகளை தகர்த்தே நிலை நிற்கும்வரை போராடும் எம்மாணவர் சமூகம்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here