அணுக்கழிவும் ஆபத்தான அணு உலையும்.- அஸ்வினி கலைச்செல்வன்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் என்றதும் நினைவிலேறி சிம்மாசனத்தில் அமர்ந்து அச்சுறுத்துவது அணுக்கரு உலைகள் தான். மிகவும் அத்தியாவசியமாக மாறிப்போன மின்சாரத்தை கார்பன் அற்ற முறையில் பெறுவதற்கு அணுக்கரு உலைகள் தான் சிறந்த வழியாக தேர்ந்தெடுத்தனர்.

இதன் விளைவாக கூடங்குளம் அணுமின் நிலையங்களில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட 2 அணு உலைகளிலிருந்து மின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளிலிருந்து மின்னுற்பத்தி எப்படி செய்யப்படுகிறது? என்பது பெருவாரியாக யாவரும் அறிந்ததே என்றபோதும் சில விளக்கங்களுடன் துவங்குவது எளிதான புரிதலை கொடுக்கும்.

ஒரு வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் சமீபகாலமாக பலரும் போராளிகளை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருப்பதால் அறிவியல் விளக்கங்களும் அவசியமாக தோன்றவே அடிப்படையிலிருந்தே துவங்குகிறேன்.

அணு என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். மிகவும் எளிமையாக கூறினால் கண்ணுக்கு புலப்படாத மிக சிறிய துகள். இதற்கு தனிமத்தின் இயல்புகள் இருக்கும். தனிமத்தின் இயல்பா?என்று நீங்கள் அடுத்த கேள்வி கேட்பது தெரிகிறது. ஒரே அணு எடை கொண்ட அணுக்களால் ஆன பொருள். பொதுவான வேதிமுறைகளால் எளிய பொருள்களாகச் சிதைக்க முடியாது. 
அதெல்லாம் சரிதான் அணு எடை அப்படின்னா என்ன?உங்களது இரண்டாவது கேள்விக்கும் விடை தருகிறேன். அணு பருமனுக்கும் அடர்த்திக்கும் உள்ள விகிதம் அணு எடை.சரி இது ஒருபுறம் இருக்கட்டும்.

ஒரு பொருளை உடைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்திற்கு மேல் உடைக்கும் போது அது இனிமேலும் அந்த குறிப்பிட்ட பொருள் என்பதற்கான பண்புகளை இழக்கும். அந்த கடைசி அளவிலான பொருளே அந்த குறிப்பிட்ட தனிமத்தின் அணு என்று வைத்து கொள்ளலாம் . அணுவை உடைக்கும் போதோ அல்லது இணைக்கும் போது ஆற்றல், சக்தியாக உருவாகிறது. இதனை ஆங்கிலத்தில் Nuclear Fission, Nuclear Fusion என்று குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலான நாடுகளில் அணுக்கரு பிளவு முறையையே பயன்படுத்தி வருகிறார்கள்.

அணு உடைப்பின் மூலம் அதிக சக்தி பெறுவதற்கு அந்த குறிப்பிட்ட அணுவின் எடை அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் எடை அதிகம் கொண்ட அணுவின் பிணைப்பு விசை(Binding energy) அதிகமாக இருக்கும். எனவே இந்த அணு உடைக்கப்படும் போது இந்த பிணைப்பு விசை சக்தியாக வெளியிடப்படுகிறது. அந்த வகையில் அதிகமான அணு எடை கொண்ட தனிமங்களே அணு உடைப்பிற்கு பயன்படுத்தப் படுகின்றன. இது போல அணு எடை அதிகமான தனிமங்களை கதிரியக்க தனிமங்கள் என்கிறோம். கதிரியக்க தனிமங்களான யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் இன்னபிற தனிமங்களே அணுக்கரு பிளவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் யுரேனியமே எடை அதிகமுள்ளது. எனவே யுரெனியத்திலிருந்துதான் அணு சக்தி பெரும்பாலும் பெறப்படுகிறது.

பொதுவாக அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அந்த அணுஉலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அணுக்கழிவாக மாறுகிறது.
அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படும்.

அணுக்கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும். இந்தச் செயல்முறைக்கு Away From Reactor என்று பெயர்.இந்த மையத்தில் நிரந்தரமாகக் கழிவுகள் சேமித்து வைக்கப்படாது. இது தற்காலிகமான ஓர் அணுக்கழிவு மையமே. ஆனால், அணுக்கழிவை “ஆழ்நிலை கருவூலம்” (Deep Geological Repository) எனும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் முறையானது. ஏனெனில் நிரந்தரமாகச் சேமித்து வைக்க பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் சேமிக்க வேண்டும். தற்காலிகமாக சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். உலகில் பல நாடுகளில் அணுக்கழிவுகள் அந்தந்த அணுஉலை வளாகத்துக்குள்தானே சேமிக்கிறார்கள் என்று தோன்றலாம். அதற்கான பலனை செர்னோபில், புகுஷிமா போன்ற அணு உலை விபத்து மூலம் அந்த நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள். கூடங்குளத்தில் மட்டும் 54 டன் அளவிலான அணுக்கழிவுகள் ஆண்டுக்கு வெளியேற்றப்படும்.

ரஷ்யாவில் உக்ரைன் மாநிலத்தில் 1986 ஆம் ஆண்டு அணுஉலை வெடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு 18 பில்லியன் ரூபிள் அளவிலான பொருளாதார சேதமும் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியது. இன்றளவும் மக்கள் நலிந்த நிலையில் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தலைமுறைகள் தாண்டியும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருப்பதோடு மண்வளங்களும் நாசமானது.

அதை தொடர்ந்து அணுகுண்டு வெடிப்பு ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்கத்திலிருந்து இன்றளவும் மக்களால் மீள முடியவில்லை என்பதும் வேதனையே.

சரி ,சற்று விரிவாக இந்த அணுக்கழிவுகள் பற்றி பார்க்கலாம்.அணு உலைகள் தொடர்ந்து மின்னுற்பத்தி செய்யாமல் பராமரிப்பிற்காக ஓய்விலிருக்கும் .அதுவரை பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் முன் குறிப்பிட்டவாறு குட்டைகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும். அணுக்கழிவுகளை குளிர்விப்பது அவசியம்.இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் அது வினைப்புரிய தொடங்கிவிடும்.அப்போது நேரும் துயரங்கள் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும். இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 ஆயிரம் ஆண்டுகள் தேவை. அந்த 24,000 ஆண்டுகள் அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்கவேண்டும்.குளிர்விப்பதிலும் பல சிக்கல்கள் உள்ள நிலையில் அப்படியே பாதுகாக்க பயன்படுத்தப்படும் நீர் தேக்க தொட்டிகளிலும் கதிர்வீச்சின் அபாயம் இருப்பதாகவும் ஜப்பான் நாட்டின் விபத்தில் இத்தேக்க தொட்டிகளும் கதிர்வீச்சுகளை வெளியிட்டதாகவும் இன்றளவும் கதிர்வீச்சுகளை வெளியிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அணுக்கரு உலைகளின் இயக்க காலம் அதிகப்படியாக 50 ஆண்டுகள் தான் அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் கதிர்வீச்சுகள் பில்லியன் ஆண்டுகள் வரை தொடரும். அது போக கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேர்த்து வைக்க தேவையான அனுமதியும் ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதியும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய அமெரிக்க மறுசுழற்சி ஒப்பந்தம்:

2010 ஆம் ஆண்டு இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் போடும் முன்னர், எந்த நாடு யுரேனிய எரிபொருள் கொடுக்கிறதோ அந்த நாட்டிற்கே பயன்படுத்தப்பட்ட எரிபொருள் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. அதாவது இந்தியா கழிவுகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய உலைகளில் ருசிய யுரேனியம் பயன்படுத்தப் பட்டாலும் பயன்படுத்தப்பட்ட அந்த எரிபொருளில் எந்த உரிமையும் இந்தியாவிற்கு இருந்ததில்லை. பல ஆண்டுகளாக அணு ஆயுதபரவல்தடை மசோதாவில் (NPT) கையெழுத்திட இந்தியாவை நிர்பந்தித்து வந்த அதே அமெரிக்கா “எங்கள் கழிவுகளை நீங்களே வைத்து ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று இப்போது கூறுகிறது.(web source)

ஏன்? எதற்கு?என்று கேட்க தோன்ற வேண்டுமே அதையும் கூறிவிடுகிறேன். தீவிரவாதிகள் கழிவில் உள்ள புளுட்டோனியத்தை ஒரு அணு ஆயுத நாட்டின் துணையின்றி பிரிக்க இயலாது. இது பிரிக்கப்படாவிட்டால், இந்தக் கழிவை திருடர்கள் நெருங்கவே முடியாது; அதன் கதிர்வீச்சு அவ்வளவு கொடியது . ஆனால் அதிக செலவு செய்து மறு சுழற்சி மூலம் கழிவில் இருக்கும் 1% (அதாவது ஒரு வருடத்திற்கு 540 kg கூடங்குளத்தில் இருந்து மட்டும் கிடைக்கும் ) புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டப் பிறகு, இந்த புளுட்டோனியத்தை திருடுவதோ அல்லது தீவிரவாதிகள் கையை சேருவதோ மிகவும் எளிது. வெறும் 6kg புளுட்டோனியமே பொக்ரானுக்குப் போதுமானது என்றால், தீவிரவாதிகள் இதனை எடுத்து செல்வது மிகவும் எளிதானதாக இருக்கும்.

மேலும் மறு சுழற்சிக்கான செலவு ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் எரிபொருளுக்கான செலவை விட அதிகம் என்பதும் இது மேலும் அபாயகரமான வேலை என்பதுமே மறு சுழற்சியை கைவிட்ட நாடுகள் பலவும் கூறுகின்றன.

மறு சுழற்சி என்பது நீதி மன்றங்களை ஏமாற்றும் விசயமாகவும், ஊழலுக்கு ஏற்ற விசயமாகவும் அணு ஆயதப் பரவலுக்கு ஏற்ற வழியுமாக இருக்கும்.
இதுவும் ஒரு வகையில் தமிழக மக்களை அழிக்கவும் தொடர்ந்து ஏமாற்றுவதற்கும் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நாட்டை பாதாளத்தில் கைப்பிடித்து இறக்கிவிடும் கொடூர செயல் என்பதே நாம் அறிய வேண்டிய உண்மை.
இப்போது கேள்வி எழுப்புங்கள் சாமானியர்களே,போராளிகள் வளர்ச்சி திட்டங்களை ஒரு போதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை. வருங்கால சந்ததியினர் நலனுக்காக தங்களையே பணயம் வைப்பவர்கள்.நீங்கள் அவர்களுடன் கரங்களை கோர்க்க வேண்டாம், அவதூறு செய்யாதிருங்கள்.

“எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனம் என்பதே ஆயுதம்
அவன் ஆயுதம் ஏந்தி விட்டால் ஆயுதம் என்பதே விமர்சனம்” எனும் காரல் மார்க்ஸின் வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை உரத்து கூறுங்கள்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here