அசுரன் – விமர்சனம். – சுமதி விஜயகுமார்.

வெற்றிமாறன் , தனுஷ் . யாரிடம் இருந்து விமர்சனத்தை துவங்குவது என்பது தான் இப்போதைய மிக பெரிய குழப்பம். இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் அசுரன் இல்லை. முதல் காட்சியிலேயே லேசான ஒரு நெருடல் ‘என்னாது , தனுஷுக்கு இவ்ளோ பெரிய பையனா ?’ என்று தான் கேட்க தோன்றும். அதெல்லாம் முதல் 5 நிமிடத்திற்கு தான். அதன் பிறகு அந்த நெருடலை மெதுவாக களையப்பட்டு கதையுடன் பயணிக்க செய்து திரைப்படம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது தனுஷ் , சிவசாமியாய் நம்முடனேயே வீட்டிற்கும் வந்து விடுகிறார்.

கதை களம் அப்படி ஒன்றும் புதிதில்லை. பலி வாங்கல் தான். ஆனால் கதைத்தளமும் , மனிதர்களும் திரையில் அதிகம் காட்டப்படாதவர்கள். இதுவரையில் எஜமான் நடந்து செல்கையில் அவரது காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து கொள்ளும் சுயமரியாதை அற்றவர்களாக காட்டப்பட்டவர்கள். தங்கள் அடிமை வாழ்வில் இருந்து காப்பாற்ற வேறு சமூகத்தில் இருந்து தான் ஒரு வீரனும் அறிவாளியும்  வருவான். ஆனால் இந்த அசுரனோ அந்த மடத்தனமான கருத்துக்களை உடைத்தெறிந்திருக்கிறான்.

இவ்வளவு பெரிய பையனா என்று நெருடிய நொடி, அவனைவிட பெரியவனாக இன்னொரு மகன் அறிமுகமாகும் பொழுது எந்த நெருடலும் இல்லை. அதற்குள்ளாகவே தனுஷ் சிவசாமியாய் மாறித்தான் போயிருந்தார். படம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் வேதனைகளையும் மிக அழகாக அதே சமயம் அலுப்பில்லாமல் வெற்றிமாறனால் தான் கொண்டு செல்ல முடியும். காட்டு பன்றிக்கு இருக்கும் உரிமை கூட ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்க்கும் நாய்க்கு இல்லை என்பதில் துவங்கி, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மட்டும் சட்டம் தன் கடமையை நிறைவேற்றும் என்பது வரை. இடையிடையில் சிவசாமியின் மகன் சிவசாமியிடம் கேட்கும் கேள்விகள் நம் மனதை உலுக்கவில்லை என்றால் நம் சுய சாதி பற்றை சற்று ஆராய்ந்தே ஆக வேண்டும்.

பொறுமைசாலியான சிவசாமி புழுதியில் திமிறி எழும் காட்சிக்காக மட்டுமே மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கலாம். இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் நேரம் துருதுரு தனுஷாகிறார். சிவசாமி எந்த அளவிற்கு நம்மை ஈர்த்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தனுஷும் ஈர்க்கிறார். முதலாளி தன்னிடம் முதலாளி தொழிலாளி பாகுபாடு மட்டும் பார்க்கவில்லை அதனுடன் வேறு ஒன்றையும் சேர்த்தே பார்க்கிறார் என்று தனுஷ் உணர்கையில் வேறு வழி இருக்கிறதா என்ன, தோழர்களுடன் இணைகிறார்.

பிரகாஷ்ராஜை போல் சமூக நீதி காக்கும் ஒரு சிலர் அரசு அதிகாரத்தில் இருப்பதினாலேயே சிவசாமிகளுக்கு குறைந்தபட்ச தண்டனைகள் கிடைக்கிறது. தான் இயற்றிய சட்டம் கொஞ்சமேனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்வதில் அம்பேத்கரும் சற்று புன்னகைக்கிறார். செருப்பு போட்டா செருப்பாலேயே அடிப்பேன் என்று சொன்ன எவரும் சிவசமியின் மகன் நடு ஊரில் செருப்பு வாங்குவதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வதின் பின்பு இருக்கும் அரசியலை மக்கள் உணர்ந்தே ஆக வேண்டும் .

சிவசாமி போல் அவரது இரு மகன்களும் கனகச்சிதமாய் கதாபாத்திரத்துடன் கலந்து போயிருக்கிறார்கள். முதலில் இருந்து கடைசி வரை சிவசாமியின் குடும்பம் சுயமரியாதைக்காக மட்டுமே போராடுகிறது.இந்த அசுரன் நம் மனசாட்சியை உலுக்கவில்லை என்றால் நாம் மனிதராய் இருப்பதற்கான தகுதியை இழந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

மீண்டும் ஒரு முறை தனுஷ் நடிக்கவில்லை , வாழ்ந்திருக்கிறார். வெற்றிமாறன் இன்னும் கொஞ்சம் பட்டைதீட்டி இருக்கிறார்.

சுமதி விஜயகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here